SALEM 5 ROADS FLYOVER WORK WILL START SOON...

2015-06-04

Property Description

சேலம் 5 ரோட்டில் ரூ.340 கோடி செலவில் மேம்பாலம் கட்டும்பணி இன்னும் 2 மாதத்தில் தொடங்கும் என்று அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொழில் முனைவோர் கூட்டம்

இந்திய தொழில் கூட்டமைப்பினர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் பார்க் பிளாசா ஓட்டலில் நடந்தது. இந்திய தொழில் கூட்டமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் கே.எம்.எஸ்.ராஜேஷ்குமார் வரவேற்று பேசினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் எஸ்.என்.ஈசன்ஹவர், ஈரோடு தலைவர் ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

சேலம் மாவட்ட கலெக்டர் கே.மகரபூஷணம், சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விஷன்-2023 திட்டம்

தமிழக அரசின் தொழில்துறை கூடுதல் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் கலந்து கொண்டு, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிந்தனையால் உருவாக்கப்பட்ட ‘விஷன்-2023‘ திட்டம் குறித்தும், தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு அரசு செய்து வரும் சலுகைகள் குறித்தும், விரைவில் சிறு தொழில்களுக்கான புதிய தொழில்கொள்கை வகுக்கப்பட உள்ளது என்றும், தென்மாவட்டங்களை தொழில்துறையில் முன்னேற செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் வருகிற மே 23 மற்றும் 24-ந் தேதி சென்னையில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்களுக்கான மாநாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனவும் அரசின் கூடுதல் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

என்னென்ன தொழிற்சாலைகள்?

சேலம் மாவட்டத்தில் பிரதான தொழில் என்று எடுத்து கொண்டால் வேளாண்மை, ஜவ்வரிசி, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெள்ளித்தொழில் ஆகியவை விளங்குகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தொழிற்சாலைகளை மையமாக கொண்டுதான் திகழ்கிறது. தொழில் முனைவோர் என்ன தொழிலை செய்ய நினைக்கிறீர்களோ? அதை செய்வதற்கு இந்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது.

சேலம்-நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஆட்டோ மொபைல் தொழிற்சாலை உருவாக்கலாம். மரவள்ளி கிழங்கு அதிக அளவில் நமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் உணவு பதப்படுத்துகிற தொழிற்சாலை தொடங்கலாம். வெள்ளி தொழிற்சாலை மற்றும் சேலம், நாமக்கல், ஈரோட்டை மையமாக வைத்து டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலை உருவாக்கலாம்.

ரூ.340 கோடியில் மேம்பாலம்

3 மாவட்டங்களிலும் தொழிலில் நல்ல வளர்ச்சி வேண்டுமானால், அதற்கு சாலைமேம்பாடு மிக மிக அவசியம் ஆகும். அதற்கு முதல் கட்டமாக பரமத்திவேலூர்-திருச்செங்கோடு சாலை விரிவுப்படுத்தப்படுகிறது. திருச்செங்கோட்டில் இருந்து மல்லியக்கரை, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல், ஈரோடு-பவானி, பவானி-மேட்டூர், மேட்டூர்- தொப்பூர் வரை உள்ள சாலைகள் விரிவுப்படுத்தப்படுகிறது. மேலும் சேலம்-திருப்பத்தூர் வரை உள்ள சாலையை விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சாலை மேம்பாட்டுக்காக ரூ.1000 கோடிக்கு மேல் செலவிடப்பட உள்ளது. சேலம் மாநகரில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் 5 ரோட்டில் ரூ.340 கோடி செலவில் பிரமாண்ட மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேம்பாலம் கட்டும்பணி இன்னும் 2 மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இதுபோல சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.வி.ஆர்.ரவுண்டானா, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ரோடு ஆகியவற்றிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதுபோல ஈரோட்டில் சாலை மேம்படுத்தும் பணி இன்னும் 4 மாதத்தில் தொடங்கப்படும்.

விமான சேவை

சேலம் விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் பயணிகள் பயணிக்காததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவிலேயே அதிக பொறியியல் கல்லூரிகள் இயங்குவது தமிழ்நாட்டில்தான். அதற்கு தக்க திறன்மிக்க மாணவர்களை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு அரசே இலவசமாக கம்யூட்டர் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.

Dhinathanthi